Monday, April 9, 2012

தவ்ஹீத் இல்லம் தாருஸ்ஸலாம்

மேலத்திருப்பூந்துருத்தியில் இந்த வீட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது . இவ்வளவுக்கும் பிரம்மாண்டமான வீடு என்றோ பிரம்மாதமான வீடு என்றோ சொல்ல முடியாது. ஆனால் பிரபல்யமான வீடு. சுமார் 25 ஆண்டுகட்கு முன்னர் இது கட்டப்பட்ட காலத்தில் கொஞ்சம் அழகானதாக இருந்திருக்கலாம். ஆனால் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் எழில் மிகுந்த கட்டடங்கள் எழும்பி நமதூரின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்தக் காலத்தில் தாருஸ்ஸலாம் ஒரு சாதாரண இல்லம் தான். ஆனால் இந்த வீடு கட்டப்பட்ட விதம் மற்ற வீடுகள் கட்டப்பட்ட விதங்களை விடச் சற்று வித்தியாசமானது 
   புதிய வீடு கட்டுவதெனத் தீர்மானித்த பிறகு அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்பது இயல்பு தானே. அதன்படி பலரிடமும் ஆலோசனைகள் கேட்டபோது, சிலர் சொன்ன ஆலோசனை, "வாஸ்து பார்ப்பவர்களிடம் வீட்டு மனையின் நீள அகலங்களைச் சொன்னால் அவர்கள் கணக்குப்(?) போட்டுப் பார்த்து, கூடம், அறைகள், சமையலறை, கழிவறை ஆகியவை எங்கு அமைய வேண்டும் என்று சொல்வார்கள் இவர்களிடம் ஆலோசனைக் கேளுங்கள்" எனக் கூறினார்கள். இன்ஜினியர்களிடம் கலந்தாலோசியுங்கள் எனக் கூறியிருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கையாளன் ஒருவனின் வீட்டை எழுப்ப, மூட நம்பிக்கையாளன் ஒருவனை அழைத்து, வந்து ஈமானை இழக்கலாமா? ஒரு முஸ்லிம் எப்படி இதற்கு உடன்பட முடியும்? 'முன்னோர்கள் செய்தார்கள்' 'முதியோர்கள் செய்தார்கள்' என்னும் முட்டாள்தனத்தை மூட்டைக் கட்டி வைத்து விட்டு நானே எனது வீட்டுக்கான மாதிரி வரைபடத்தை உருவாக்கி எனது தந்தையிடம் கொடுத்து " யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி உள்ளமைப்பை உருவாக்குங்கள்" என்றேன். மார்க்க விஷயங்களில் எனது கருத்துக்களுக்கு மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதிக்கும் எனது தந்தை, இதற்கும் அப்படியே சம்மதித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
   வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணி இனிதே ஆரம்பமானது. பொதுவாக அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிக்கும்போது கட்டடப் பணியாளர்கள், கற்களை வைத்து அவர்கள் சார்ந்த மதப் பழக்கமான பூஜை புணஸ்காரங்கள் செய்வார்கள். பிற சமூகத்தவர் தங்களுடைய வீடுகளை எழுப்பும்போது அவர்களின் மதச்சடங்குகளின்படி அமைப்பதை நாம் குறை கூறவில்லை. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் நம் சமூக மக்கள் அமைக்கும் வீடுகளில் அந்த சடங்கு சம்பிரதாயங்கள் அரங்கேறும் போது கை கட்டி வாய் பொத்தி நின்று அவற்றை ஆமோதிக்கும் நம்மவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலைச் செய்கின்றோமே! அல்லாஹ்விடம் குற்றவாளியாக நிற்க வேண்டுமே! என்னும் நினைவு இவர்களின் உள்ளங்களில் தோன்றவே தோன்றாதா? மன்னிப்பே இல்லாத இந்த மொபெரும் பாவத்தைச் செய்ய எப்படி மனம் வந்தது? அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் எங்கே போனது? எந்தவிதமான பூஜை புணஸ்காரங்களும் இல்லாமல் அஸ்திவாரம் தோண்டப்பட்டது . கட்டடம் இறையருளால் சிறிது சிறிதாக மேலெழும்பியது. இனி பேஸ் மட்டம் வரை வந்து நின்ற போது அடுத்த கட்ட போராட்டம் ஆரம்பமானது. 
   முதல் நிலை வைக்கும் போராட்டம். ஆசாரி கொத்தனார் அனைவரும் வந்து விட்டனர். முதல் நிலை தயாராகிவிட்டது. "குங்குமமும் சந்தனமும் வேண்டும்" என ஆசாரி சொல்ல, "பூவும் வாழைப்பழமும் வேண்டும்" என கொத்தனார் சொல்ல, "இவை எதுவுமே கிடையாது" என நான் சொல்ல அங்கு ஆரம்பமானது ஏகத்துவத்திற்கெதிரான போர். இறுதியில் ஏகத்துவம் தான் வென்றது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. வீட்டின் அனைத்து நிலைகளும் ஒரு போல வடிவமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஒரே மாதிரி மிக எளிமையாக, மிகச் சாதாரணமாக தூக்கி நிறுத்தப்பட்டன. பூஜை புணஸ்காரம் இல்லை, பூவும் பொட்டும் இல்லை, சந்தனமும் சாம்பிராணியும் இல்லை, ஊது பத்தியும் வாங்கவில்லை. அஜரத்தும் அல்பாத்தியாவும் இல்லை. கடகடவென கட்டடச் சுவர்கள் ஏறத் தொடங்கின. இடையிடையே கட்டட மேஸ்திரி "பாய்! இங்கு தான் ஜன்னல் வைக்க வேண்டும் இங்கு நிலை வைக்கக் கூடாது கழிப்பறை இங்கு வைக்கக் கூடாது, சமையலறை இங்கு தான் அமைய வேண்டும்" என்று ஒவ்வொன்றாகச் சொல்ல, அவற்றில் நியாயமான வற்றையும், அறிவுக்குப் பொருத்தமான வற்றையும் மட்டும் அங்கீகரித்து, மற்றவற்றைப் புறந்தள்ளி, எவையெல்லாம் நமது வசதிக்கும் வீட்டின் இட அமைப்புக்கும் சரியாக அமைந்ததோ அதன் படி அமைத்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் காங்கிரீட் ரூப் மட்டம் வரை வந்து நின்றது. 
   இனி அடுத்த கட்டப் போராட்டம் காங்கிரீட் போடும்போது ஆரம்பமானது. பொதுவாக காங்கிரீட் போடும் தினத்தன்று வேலை செய்பவர்கள் அன்று அதிகாலைத் தொடங்கி இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து காங்கிரீட் போட்டு முடிப்பார்கள். அன்று பணிபுரிவோர் அனைவருக்கும் பகல் உணவு வீட்டின் உரிமையாளர் பொறுப்பு. இது தான் வழக்கமாக உள்ள நடைமுறை. சந்தோஷத்தில் அளிக்கும் இந்த விருந்தை குறை கூற முடியாது. ஆனால் அந்த விருந்தின் பின்னனியில் ஒரு மாபெரும் சதித்திட்டமாக ஷிர்க் இருப்பதை பலரும் வசதியாக மறந்து விடுவர் அல்லது மறைத்து விடுவர். அதாவது காங்கிரீட் போடும்போது வீட்டுக்காக ஆடு அறுத்து பலியிட்டு அதன் இரத்தத்தை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிப்பது. அன்று அறுத்த அந்த ஆட்டை விருந்தாக்கி அன்றைய தினம் வேலை செய்தவர்களுக்கு சோறு ஆக்கி போடுவது நடைமுறை. பிற சமூகத்தவர் தங்கள் தெய்வங்களுக்கு இரத்த பலி கொடுப்பதும் அதன் காரணமாக வீட்டு வேலைகள் தடையில்லாமல் நடக்கும் என நம்புவதும் அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கை. ஆனால் அல்லாஹ்வை நம்பும் முஸ்லிமுக்கு இது மாபெரும் இணைவைத்தல் என்னும் பாவச் செயல் அல்லவா? இதை ஏன் நாம் உணர்வதில்லை. எமது வீடு காங்கிரீட் போடும் தினத்தன்று காலை, முதற் தவணையாக 10 மூட்டை சிமெண்ட், கருங்கள் ஜல்லி கலந்து கலவை தயாராகி விட்டது. மேஸ்திரி வந்து நின்று கொண்டு, "சீக்கிரம் ஆடு அறுத்து இரத்தம் கொண்டு வாருங்கள் நேரமாகின்றது" என்று கூற, "ஆடு அறுக்கவில்லை. இரத்தமும் இல்லை வேலையை ஆரம்பியுங்கள்" என நான் கூற "கோழியாவது அறுக்கத்தான் வேண்டும்" என்று கொத்தனார் கூற "கோழியும் அறுக்க வில்லை" என்று நான் கூற இறுதியாக எலுமிச்சம்பழமாவது அறுத்தால் தான் வேலை ஆரம்பிக்க முடியும் என வாக்குவாதம் தொடர்ந்தது. "10 மூட்டை சிமெண்ட் கலவை போட்டாகி விட்டது கலவை காய்ந்து வீணாகி விடும்" என கொத்தனார் சொல்ல, "கலவை வீணாகி விட்டால் கலவையைக் குழி தோண்டிப் புதைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை எமது கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்க நான் சம்மதிக்க மாட்டேன். எந்த வித பூஜைக்கும் இரத்த பலிக்கும் இங்கு இடமில்லை" என்று நான் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் இறுதி வரை உறுதியுடன் நின்றேன். தலைமைக் கொத்தனாரின் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப்போக இறுதியில் .'பாய்! உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம் எங்களுக்கும் கட்டடத்தின் பாதுகாப்புக்கும் அது தேவை" என்று கொத்தனார் கடைசி அஸ்திரத்தையும் பிரயோகித்து விட்டார். அதற்கு நான் அளித்த பதில், கொத்தனாரை மேற்கொண்டு விவாதத்தைத் தொடர முடியாமல் ஆக்கியது. "இந்தக் கட்டடமே இடிந்து விழுந்தாலும் பரவாயில்லை. அதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போதுமா? என்று நான் சொல்ல இறுதியாக வேறு வழியின்றி, கொத்தனார் காங்கிரீட் போடத் தொடங்கினார்.
   அன்று பகல் அனைவருக்கும் விஜிடபிள் பிரியானி தான் வழங்கப்பட்டது. 3 வாரங்கள் கழித்து செண்டரிங் பலகைகள் பிரிக்கப்பட போது, அதே காலகட்டத்தில் சகலவிதமான பூஜை புணஸ்காரங்களுடன்(?) கட்டப்பட்ட வீடுகளின் காங்கிரீட்டை விட மிக அருமையாக ஒரு குறைபாடும் இல்லாமல் நமது காங்கிரீட் அமைந்திருந்ததை கொத்தனார்களும் சித்தாள்களும் கண்ணாரக் கண்டார்கள். 'வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்தோம்' என்றில்லாமல் பொறுப்புடனும் அக்கரையுடனும் கட்டடம் பூர்த்தியடையும் வரை அயராது பாடுபட்ட மேஸ்திரி, கொத்தனார்கள், சித்தாள்கள், மற்றும் கட்டடப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றி. கொண்ட கொள்கையில் சற்றும் மனம் தளராமல் உறுதியுடன் நாம் நின்றதற்கு "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல் குர்ஆன் 9:51) என்னும் இறைவனின் திருவசனமும் "யார் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்" என்னும் இறைத் தூதரின் பொன்மொழியுமே காரணம். 

   குறிப்பு: சொந்த வீட்டின் பெருமையைப் பறைசாற்ற எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. இந்த இல்லம் கட்டப்பட்ட விதத்தை அனைவருக்கும் அறியத் தருவதும் இன்ஷா அல்லாஹ் இனி நமதூரில் எழுப்பப்படவிருக்கும் இல்லங்கள் அனைத்தும் இந்த வழிமுறையில் எழுப்பப்படக் கூடாதா? என்னும் ஆதங்கத்திலும் ஆசையிலும் தான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன.. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம். அவனின் அடிமை அதற்கெப்படி சொந்தம் கொண்டாட முடியும்? 'போராட்டங்கள் இத்துடன் முடிவடைந்தன' என்றா நினைக்கிறீர்கள்?. அது தான் இல்லை. 

    புதுமனைப் புகுவிழாவில் நடந்த போராட்டங்கள் தனிக்கட்டுரையாக இன்ஷா அல்லாஹ்
 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.