Tuesday, March 20, 2012

மறக்க முடியா நிகழ்ச்சி-3

நமதூருக்கு அடிக்கடி தப்லீக் ஜமாஅத் வரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நானும் பல முறை பல நாட்கள் ஜமாஅத்தில் சென்றிருக்கிறேன். அவையெல்லாம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள். அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் சுவை தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்றிருந்த போது ஒரு நாள் நமதூர் பெரியப் பள்ளியில் அசர் தொழுதுவிட்டு வெளியில் வந்த போது, அன்று வந்திருந்த வெளியூர் ஜமாஅத்திலிருந்து ஒரு நண்பர் என்னைப் பார்த்து விட்டு 'மஸ்தூக்கா! நலமாக இருக்கிறீர்களா?' என்று கைகொடுத்து விசாரித்துக் கொண்டிந்தார்.

நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, மற்றொருவர் வந்து 'மஸ்தூக்கா! நலமா? நீங்கள் சவூதியிலிருந்து எப்போது வந்தீர்கள்? என்று என்னிடம் கேட்டுவிட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் 'உங்களுக்கு மஸ்தூக்காவைத் தெரியுமா?, எனக் கேட்க இவர் அந்த நண்பரிடம் உங்களுக்கும் மஸ்தூக்காவைத் தெரியுமா? எனக் கேட்க, இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.

இப்படி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது மேலும் ஒரு ஆச்சரியம் எங்களுக்கு காத்திருந்தது. மூன்றாவதாக வேறொருவர் வந்து என்னை ஆரத்தழுவி 'ஸலாம்! எப்படி மாப்ளே இருக்கே! என்றாரே பார்க்கலாம். எங்கள் அனைவருக்கும் ஆச்சரியம்.

இதைப் படிக்கும் உங்களுக்கு தலை சுற்றுமே! அப்படித் தான் அன்று எங்கள் அனைவருக்குமே தலை சுற்றியது. தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து விசாரிக்கிறார்கள் அவ்வளவு தானே! இதில் ஆச்சரியப் படவும் தலை சுற்றவும் என்ன இருக்கிறது? இது தானே உங்கள் கேள்வி.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் அதாவது திருப்பந்துருத்தி பெரியப் பள்ளிக்கு வெளியில் வந்து நின்று என்னை சுகம் விசாரித்த அந்த 3 பேரும் ஒரே ஜமாஅத்தில் வந்தவர்கள் தான். ஆனால் இந்த ஜமாஅத்தில் வருவதற்கு முன் யாரையும் யாருக்கும் தெரியாது. இதற்கு முன் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல. பல்வேறு ஊர்களில் இந்த ஜமாஅத்தில் இணைந்து சில தினங்களாக ஜமாஅத்தில் வந்திருக்கின்றனர் அவ்வளவு தான்.

இதற்கு முந்தைய நாள் தஞ்சாவூரில் தங்கள் தஃவாப் பணிகளை முடித்த பின்னர், 'இன்ஷா அல்லாஹ் நாளை திருப்பந்துருத்தி செல்கிறோம்' என அமீர் சாஹிப் சொல்ல 'நமது நண்பர் மஸ்தூக்காவின் ஊர் அல்லவா? நமது நண்பர் மஸ்தூக்காவை சந்திக்கலாமே! என்று மூவருமே ஒருபோல மனதில் நினைத்திருக்கின்றனர். இதை அன்றைய சநத்திப்பின் போது நண்பர்கள் மூவருமே சொன்னபோது என்னையும் சேர்த்து எங்கள் நால்வரின் வாயிலிருந்தும் வெளிவந்த வார்த்தை 'சுப்ஹானல்லாஹ்'

தப்லீக் பற்றி சரியாகத் தெரியாவாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம் இங்கு சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
ஒரு ஜமாஅத் புறப்படும். அதில் சிலர் 3 நாள் சிலர் 7 நாள் சிலர் 40 நாள் எனப் பெயர் கொடுத்திருப்பார்கள். 3 நாள் பெயர் கொடுத்தவர் 3 நாள் முடிந்ததும் விலகிவிடுவார். அதற்கிடையில் ஜமாஅத் 2 அல்லது 3 ஊர்களைக் கடந்திருக்கும். இந்த ஊர்களில் மேலும் பலர் இணைந்து கொள்வர். சங்கிலித் தொடர் போல் இது நீண்டு கொண்டே போகும்.

இப்படித்தான் பல்வேறு ஊர்களிலிருந்தும் இந்த 3 பேரும் இந்த ஜமாஅத்தில் இணைந்திருக்கின்றனர். இதற்கு முன் இந்த மூவரில் யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த 3 பேரும் பல்வேறு காலகட்டங்களில் பல இடங்களில் எனக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் என்னுடன் பயின்ற நண்பர் ஒருவர். பம்பாயில் டிராவல்ஸ் ஒன்றில நான் அரபி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது எங்கள் அலுவலகத்தில் வைத்து அறிமுகம் ஆன நண்பர் மற்றொருவர். அலுவலகப் பணி நிமித்தம் புது டெல்லி சென்ற போது அங்கு அறிமுகம் ஆன நண்பர் ஒருவா.

இப்படி 3 வெவ்வேறு இடங்களில் எனக்கு அறிமுகம் ஆன 3 வெவ்வேறு நண்பர்களின் நட்பு பல வருட இடைவெளிக்குப் பின் இப்போது நமதூர் பெரியப் பள்ளியில் வைத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.



 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.