Wednesday, February 17, 2010

கதையல்ல நிஜம்-2

வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே மனதில் நிற்கின்றனர். எத்தனையோ நூல்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில நூல்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அது போல் நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால் அவற்றில் சில நிகழ்ச்சிகள் வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சிகளாக மனதில் பதிந்து போகின்றன.

அவ்விதம் ஆழ் மனதில் பதிந்து போன மறக்க முடியா நிகழ்ச்சிகளை மறுபடியும் அசை போட்டுப் பார்த்தால் என்ன? என்று எண்ணியதன் விளைவு தான் இக்கட்டுரை. சந்தேகமில்லாமல் இது முழுக்க முழுக்க சுய புராணம் தான். ஆனாலும் சுவையான சுய புராணம்.

மறக்க முடியா நிகழ்ச்சி-2

எமது வெளியீடான 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' நூலைப் படித்துப் பார்த்த எமது நண்பர் கொள்ளுமேடு முஹம்மது தாஹா அவர்கள் இந்நூலை இவ்வருடம் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள விருக்கும் தமது தாயார் உறவினர்களிடம் வாழ்த்தி வழியனுப்பி வைக்க வருமாறு அழைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்க விரும்புவதாக தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நூலின் பிரதிகளை அவர் வீட்டில் கொண்டு போய் சேர்க்க நானே நேரில் சென்ற போது நண்பர் முஹம்மது தாஹா அவர்களின் மூத்த சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்கள் எம்மை வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

வழக்கமான சுக விசாரித்தலுக்குப்பின் எமது நூலைப் பற்றிய பேச்சு எழுந்தது. 'தாங்கள் தான் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காவா? அப்படியானால் தங்கள் சொந்த ஊர்?' என அவர் கேட்டு முடிக்கு முன் நான் 'திருப்பந்துருத்தி' என்று சொல்ல, தாங்கள் தான் 'திருப்பந்துருத்தி மஸ்தூக்காவா?' என்று கேட்டு ஆச்சர்யத்தில் அவர் கண்கள் அகல விரிந்தன.

சற்று பொறுங்கள் என் என்னிடம் கூறிவிட்டு அவர் தன் தாயாரை அழைத்து, 'அம்மா! நீங்கள் பலரிடமும் அடிக்கடி படித்துக் காட்டுவீர்களே! அந்தக் கடிதத்தை எடுத்து வாருங்கள்' என்று கேட்டுக் கொள்ள உடனே அவரின் தாயார் ஒரு கடித உறையைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அந்தக் கடித உறையை என்னிடம் கொடுத்த சகோதரர் ஜக்கரியா அவர்கள் 'கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்' என என்னிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் அக்கடிதத்தைப் பிரத்துப் படித்துப் பார்த்தேன். இப்போது ஆச்சர்யத்தில் அகல விரிந்தது அவர் கண்களல்ல என் கண்கள்.

கடிதத்தில் இடப்பட்டிருந்த தேதி 1987 ஆம் வருடம் எழுதிய கடிதம் அது என்று அடையாளம் காட்டியது. சகோதரர் ஜக்கரியா அவர்கள் சவூதியில் இருந்த போது புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்து தனது பயண அனுபவங்களை ஒரு நீண்ட கட்டுரையாக தன் தாயாருக்கு அப்போது எழுதிய கடிதம் அது.

புனித ஹஜ்ஜில் தாம் கண்ட காட்சிகளை வர்ணனையாக எழுதி இந்தக் கட்டுரைக்கான கருத்து உதவி 'திருப்பந்துருத்தி அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா' என்று நன்றியுடன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தின் இறுதி வரிகளைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. இந்த சிலிர்ப்பு அல்லாஹ்வின் மீது ஆணையாக கர்வத்தில் அல்ல.

நான் ஒரு அறிஞனுமல்ல, புகழ் பெற்ற எழுத்தாளனுமல்ல, இஸ்லாமிய எழுத்துலகில் நான் இன்னும் அரிச்சுவடி கூடப் படிக்காதவன். அப்படியிருக்க பெருமையும் கர்வமும் எங்கிருந்து வரும்?

இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹஜ் பயணக் கட்டுரை நூல், எங்கோ ஒரு மூலையில் எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு முஸ்லிம் சகோதரருக்கு, அதுவும் புனித ஹஜ்ஜை நிறை வேற்றும் வழிகாட்டியாகப் பயன் பட்டிருக்கிறதே! அல் ஹம்து லில்லாஹ். அந்த ஹஜ்ஜில் எனக்காகவும் அவர் துஆச் செய்திருப்பார் அல்லவா? அது போதும் எனக்கு.

மிக அருமையாக ஹஜ்ஜின் அனுபவங்களை தன் தாய்க்கு கடிதமாக எழுதிய அந்தச் சதோதரர், தான் பெருமைப் பட்டுக் கொள்ளாமல் மிகவும் நன்றியுடன் எனது பெயரை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அவர் உயர்ந்தவர்.

தனது அன்பு மகன் எழுதிய அருமைக் கடிதத்தை இருபது வருடங்களாகப் பாதுகாத்து எல்லோரிடமும் படித்துக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறாரே அந்தத் தாய் உயர்ந்தவர்.

தனது தாயை வழியனுப்பி வைக்க வருகை தரும் அனைத்து உறவினர்களுக்கும் புனித ஹஜ்ஜின் மகத்துவத்தைப் புரியவைக்கும் புத்தகத்தை வழங்கி வித்தியாசமான முறையில் வழியனுப்பிவைக்கும் அந்தப் புனிதத் தாயின் நன்மக்கள் உயர்ந்தவர்கள்.

அனு தினமும் தவறாது தொழுது அழுது மன்றாடிய முறையீட்டை ஏற்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றை அந்த நன்மக்களின் தாய்க்கு வழங்கிய அல்லாஹ் அனைவரையும் விட மிக மிக உயர்ந்தவன்.
 

Copyright 2009 அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. Blogger Templates created by Deluxe Templates. Wordpress by Justin Shattuck.